Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களுக்கான தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடர் - களுத்துறை மாவட்டம்

உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களுக்கான தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடர் – களுத்துறை மாவட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க, போதைப்பொருள் அபாயத்தை இல்லொழித்தல் மற்றும் புனர்வாழ்வளிக்கும் செயல்முறையை வலுப்படுத்துவதற்காக அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன், புனர்வாழ்வுப் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டத் தொடரின் களுத்துறை மாவட்ட வேலைத்திட்டம், 2026 அக்டோபர் 28 ஆம் திகதி களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் ஒழிப்பு, வழிகாட்டல் மற்றும் புனர்வாழ்வு என்பன தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அறிவு மற்றும் திறன்களை வளர்ப்பதும், போதைப்பொருள் ஒழிப்புக்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, ஒருங்கிணைந்த வலையமைப்பொன்றை உருவாக்குவதும் இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாகும்.

களுத்துறை மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சித் திட்டத்தில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால், களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியு.ஜே. பத்மினி, களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ. உதயகுமார, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மகளிர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மிஹிராணி திலகரத்ன, சிரேஷ்ட உளவளத்துணை ஆலோசகர் மற்றும் மனநலச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமிந்த வீரசிறிவர்தன, களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புத்தி எரங்கிகா, களுத்துறை சிறைச்சாலையின் பதில் பிரதான சிறைச்சாலை அதிகாரி ஹேமந்த பிரதீப் உள்ளிட்ட உளவளத்துணையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தில் வருகை தந்தோரை வரவேற்று உரையாற்றிய புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், போதைப்பொருளுக்கு அடிமையான இளம் சமூகத்தினரை அதிலிருந்து மீட்டுச் சிறந்த சமூக வாழ்க்கைக்கு உட்படுத்துவது புனர்வாழ்வுப் பணியகத்தின் பிரதான நோக்கமாகும் எனவும், அந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணை ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், புனர்வாழ்வுச் செயல்முறைக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ளப்படும் முன்னாய்வு மற்றும் பின்னாய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, மாவட்ட மட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்ட உளவளத்துணையாளர்கள் குழாமை நிறுவுவதற்கான அவசியத்தையும் மற்றும் எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள மாவட்ட புனர்வாழ்வு நிலையங்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.
இச்செயலமர்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய களுத்துறை மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் அவர்கள், சிறந்த மற்றும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதற்காகக் கல்வித்துறையில் உளவளத்துணை ஆசிரியர்கள் வசமுள்ள பொறுப்பு மற்றும் கடமைப்பாடு குறித்தும், “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தின் இளைய தலைமுறையினரை போதைப்பொருள் அபாயத்திலிருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

இச்செயலமர்வில் வளவாளராகக் கலந்துகொண்ட சிரேஷ்ட உளவளத்துணை ஆலோசகர் மற்றும் மனநலச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமிந்த வீரசிறிவர்தன, அடிமைத்தனம் என்றால் என்ன, மூளையின் செயற்பாடுகள் மற்றும் அதன் மூலம் போதைப்பொருள் மற்றும் பல்வேறு ஒழுக்கக்கேடுகளுக்கு ஆளாகும் விதம், உணர்ச்சிப் பரிமாணக் கட்டுப்பாடு, அழுத்தங்களின் வகைகள், நடத்தை ரீதியான தாக்கங்கள் மற்றும் பாதுகாப்பான குடும்ப அலகுகளுக்கான வழிகாட்டல் வழங்குவது தொடர்பில் உளவியல் ரீதியாக விளக்கமளித்தார்.

மேலும், போதைப்பொருள் பாவனை தொடர்பான சட்ட நிலைமைகள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்புகள், போதைப்பொருள் பாவனையினால் ஏற்பட்ட சமூக நிகழ்வுகள் மற்றும் அதன் ஆபத்தான பக்கங்கள் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மகளிர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மிஹிராணி திலகரத்ன அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

உரைகளைத் தொடர்ந்து, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித் அவர்களின் தலைமையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மகளிர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மிஹிராணி திலகரத்ன, சிரேஷ்ட உளவளத்துணை ஆலோசகர் மற்றும் மனநலச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமிந்த வீரசிறிவர்தன, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புத்தி எரங்கிகா மற்றும் களுத்துறை சிறைச்சாலையின் பதில் பிரதான சிறைச்சாலை அதிகாரி ஹேமந்த பிரதீப் ஆகியோரின் பங்களிப்புடன் துறைசார் நிபுணர் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இங்கு, போதைப்பொருள் அடிமைத்தனத்திற்கு காரணமாகும் சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட காரணிகள், குடும்பச் சூழலின் தாக்கம், பாடசாலை அமைப்பின் பொறுப்பு, கல்விச் செயற்பாட்டிற்குள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டல்களை உள்ளடக்குதல், உளவளத்துணையின் போது நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பிரச்சினைகள், உளவளத்துணை சேவைகளின் பங்களிப்பு மற்றும் புனர்வாழ்வுச் செயல்முறையை மேலும் வலுப்படுத்துவதற்கான தேவை என்பன குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான தேசிய நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக அரச நிறுவனங்கள், கல்வித் துறை, சுகாதாரத் துறை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையில் வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.