காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் புனர்வாழ்வுப் பணியகம் (BOR) ஆகியவற்றுக்கு இடையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களில் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 2026 ஜூன் 24 ஆம் திகதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்டது.
புனர்வாழ்வுப் பணியகம் இவ்வாறு காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம், சர்வதேச மனித உரிமைப் கோட்பாடுகளுக்கு இணங்கி ஒழுகுவதன் ஊடாக இலங்கையின் புனர்வாழ்வுச் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் உலகிற்கு முன்னால் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. அத்துடன், போருக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் மற்றும் அதிலிருந்து மீள முயற்சிக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கு, இரு நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் இவ்வாறான ஒத்துழைப்பானது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைவதுடன், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுவதையும் புனர்வாழ்வையும் ஒன்றிணைந்து செயல்படுத்துவதன் மூலம் சமூகத்தில் உண்மையானதும் நிலையானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான புதியதொரு பாதையும் இதன் மூலம் திறக்கப்படுகின்றது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் இதற்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC), தேசிய ஆவணகத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகிய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. புனர்வாழ்வுப் பணியகத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், OMP இன் பணிக்கட்டளையை முன்னெடுத்துச் செல்லவும், தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கியமான முன்னேற்றமாகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், குறிப்பாக தகவல் பரிமாற்றம், பரிந்துரைகள், திறன் மேம்பாடு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குதல் தொடர்பான நடவடிக்கைகளில் இரு நிறுவனங்களுக்குமிடையேயான ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.
இந்த கூட்டாண்மையின் மூலம், OMP மற்றும் BOR ஆகியவை தகவல் பரிமாற்ற முறைகளை வலுப்படுத்தி, மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்கும் தங்களது ஒருங்கிணைந்த முயற்சிகளை மேம்படுத்த முனைவதாகும். இந்த ஒத்துழைப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடுதல், அவர்களின் நிலை மற்றும் இருப்பிடத்தைத் தெளிவுபடுத்துதல் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகிய OMP இன் பணிக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் திரு. மஹேஷ் கட்டுலந்த மற்றும் புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம். எஸ். அமித் ஆகியோர், இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மனிதாபிமானக் கவலைகளை எதிர்கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக பயனுள்ள நிறுவன ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கான தங்களது அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை பிரதிபலிக்கிறது.