Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

மாவட்ட ரீதியில் உளவளத்துணையாளர் குழாமை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டம் - கம்பஹா மாவட்டம்

புனர்வாழ்வுப் பணியகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகங்களினால் முன்னெடுக்கப்படும் முன்னாய்வு மற்றும் பின்னாய்வு நடவடிக்கைகளின் போது, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு உளவளத்துணையாளர்கள் போதியளவு இல்லாமையினால் இச்செயற்பாட்டின் வெற்றிக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்கும் முதன்மை நோக்குடன், “மாவட்ட உளவளத்துணையாளர் குழாமை” (District Counseling Officers Pool) நிறுவுவதற்கான முன்னோடித் திட்டமொன்று கம்பஹா மாவட்டத்தை இலக்காகக்கொண்டு 2026.06.23 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

​புனர்வாழ்வுப் பணியகத்தின் பேரவைத் தலைவர், முதுநிலைப் பேராசிரியர் வசந்தா சுபசிங்க அவர்களின் கருத்தாக்கத்திற்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, பேரவைத் தலைவர், கம்பஹா மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.டபிள்யூ.எஸ். கித்சிரி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சிரான் அமித், மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால் உட்பட புனர்வாழ்வுப் பணியகத்தின் அதிகாரிகள், கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உளவளத்துணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

​இக்குழுவின் ஊடாகத் தேர்ந்தெடுக்கப்படும் உளவளத்துணையாளர்களின் வளப் பங்களிப்பை முதற்கட்டமாக பின்னாய்வுச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த எதிர்பார்ப்பதுடன், அதற்கமைய புனர்வாழ்வு பெறுபவர் நிலையத்தில் இருக்கும் காலப்பகுதியில், சிதைவடைந்த குடும்பக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கும், புனர்வாழ்வு பெறுபவர் குறித்து குடும்பத்தினரிடையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்குவதற்கும் தேவையான பின்னணியை ஏற்படுத்துவதற்கும், அத்தோடு புனர்வாழ்வு பெறுபவர் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் குடும்பச் சூழலில் சிறந்த உறவுகளைப் பேணுவதற்கும், அவர்கள் மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

​இது தொடர்பான சிறப்பு விரிவுரையொன்றை கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி பிரபா யடவர அவர்கள் வழங்கினார். புனர்வாழ்வு பெறுபவர்களின் மனநிலை, ஆலோசனையின் போது அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றும் போது தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விடயங்கள் குறித்தான விழிப்புணர்வை நவோதாவ மூன்றாம் நிலைக் கல்வி, தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையத்தின் உளவளத்துணையாளர் திருமதி நிமாயா பிரியமாலி அவர்கள் வழங்கினார்.